தோனியைப் புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்-கிற்கு பிசிபி “குட்டு”

 

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியை பாராட்டியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்கை கண்டித்துள்ளது.

தோனி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் விளையாட்டின் உண்மையான தூதர் என்று விவரிக்கும் வீடியோவை முஷ்டாக் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார், மேலும் தோனிக்கு முறையான பிரியாவிடை போட்டியை பிசிசிஐ வழங்கவில்லை என்றும் அந்த வீடியோவில் விமர்சித்திருந்தார்.

பி.சி.பியின் உயர் செயல்திறன் மையத்தில் சர்வதேச வீரர் மேம்பாட்டு பிரிவின் தலைவராக உள்ள சக்லைன் முஷ்டாக், பி.சி.பியின் அனுமதியின்றித் தன்னிச்சையாக இதுபோன்று யூடியூப் சேனல்களை இயக்க முடியாது என்று பி.சி.பி கூறியுள்ளது.

தோனியைப் புகழ்ந்ததற்காகவும், இந்திய கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் தலையிட்டதற்காகவும் பாகிஸ்தான் வாரியம் சக்லைன் முஷ்டாக்கை கண்டித்துள்ளதோடு, பிசிபியின் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

சக்லைனைத் தவிர, முன்னாள் டெஸ்ட் வீரர்களான பசித் அலி, பைசல் இக்பால், முகமது வாசிம் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் யூடியூப் சேனலில் மிகவும் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.