பாஜக வுடன் இணைய தயாராகும் பிடிபி எம் எல் ஏக்கள்

ஸ்ரீநகர்

பிடிபி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க தயாராக உள்ளதாக மெகபூபா எதிர்ப்பு அணி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பாஜக வுடன் இணைந்து மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி  காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி அரசு அமைத்திருந்தது.   ஒரு சில கருத்து வேற்றுமை காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகியது.   அதனால் முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார்.    அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.

பிடிபி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைக்க முயல்வதாக எழுந்த புகாரை அடுத்து மெகபூபா பாஜகவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.   பாஜக தனது கட்சியான பிடிபியை உடைக்க முயன்றால் தீவிரவாதம் பெருகும் எனவும் அதன் கடுமையான விளைவுகளை மத்திய பாஜக அரசு சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று பிடிபி கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவரான அப்துல் மஜீத் பாதர் செய்தியாளர்களிடம், “பாஜக வுடன் இணைந்து ஆட்சி அமைக்க எங்கள் கட்சியின் 28 சட்டமன்ற உறுப்பினர்களில் 18 பேர் தயாராக உள்ளனர்.   எங்கள் தலைவி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள போது அதே கட்சியனரான நாங்கள் ஏன்  பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடாது?

மேலும், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பதவி பறி  போகாத அளவுக்கு எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்தால் எந்த நிமிடமும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கத் தயார்.   தற்போதுள்ள சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 44 பேர் தேவை.  பாஜகவிடம் 25 உறுப்பினர்கள் உள்ளனர்.   பிடிபி யில் இருந்து 18 பேர் இணைந்தால் 43 ஆகும்,   ஏற்கனவே பூப்பிள் கான்ஃபரன்ஸ் கட்சியின் இரு உறுப்பினர்கள் பாஜகவின் கூட்டணியில் இருந்தவர்கள் ஆவார்கள்” என தெரிவித்துள்ளார்.