காத்மண்டு: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என சொல்லும் அளவுக்கு, ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மலையேறும் வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் சாகசத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மலையேறும் வீரர்கள் நான்காவது முகாமை கடந்து, வரிசையில், புதன்கிழமை காலையில் 2 மணிநேரத்திற்கும் அதிகமாக காத்திருந்தனர்.

இந்த வசந்த காலத்தில் மட்டுமே, 44 குழுக்களுக்கு, 381 மலையேறும் அனுமதிகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே 14ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் வழியை நேபாள அரசு திறந்தது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி ஜுன் மாதம் இறுதிவரை, எவரெஸ்ட் மலையேறும் வைபத்தில் நூற்றுக்கணக்காக மலையேறும் வீரர்கள் பங்கு பெறுவது வழக்கமாகும்.

கடந்த 1953ம் ஆண்டு எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நார்கே ஆகியோர் முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை செய்தது முதல், இதுவரை மொத்தம் 4400 பேர் அந்த சாதனையைப் பின்தொடர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.