சென்னை:
சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்தின்போது, முகக் கவசம் அணியாத பயணிகளுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, தொற்று நோய் கட்டுப்பாட்டு சட்டம் , பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ், பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். இதற்கான உத்தரவை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இதனை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பின்பற்றப்பட உள்ளது.

இதன்படி, ஒவ்வொரு பயணியும் சரியான முறையில் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்த பின்னரே, மெட்ரோ ரயில் நுழைவு வாயிலுக்குள் செல்ல வேண்டும். மெட்ரோ நுழைவுவாயில் வழியாக செல்லும்போதும், மெட்ரோ ரயில் பயணத்தின் போதும் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

மெட்ரோ ரயில் வளாகம், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதும், பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்கிறாா்களா என்பதைக் கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.