ஐ எஸ் தலைவன் அல் பாக்தாதி மீது நடந்த தாக்குதல் வீடியோவை பெண்டகன் வெளியிட்டது.

வாஷிங்டன்

மெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் நேற்று அமெரிக்கப்படைகள் ஐ எஸ் இயக்க தலைவன் அல் பாக்தாதி மீது நடத்திய தாக்குதல் குறித்த வீடியோவை வெளியிட்டது.

கடந்த 27 ஆம் தேதி அன்று சிரியாவில் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பிடிபட்ட ஐ எஸ் இயக்கத் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி தன்னைத் தானே வெடிக்கச் செய்து மரணமடைந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.   மேலும் அது குறித்த வீடியோக்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில்  வெளியிடப்படும்  என அவர் தெரிவித்திருந்தார்.

அதன் படி அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் நேற்று சிரியாவின் வடமேற்கு பகுதியில் அல்-பாக்தாதி பதுங்கியிருந்த வளாகத்தை அமெரிக்கச் சிறப்புப் படை வீரர்கள், இரண்டு திசைகளில் இருந்து நெருங்கும் கறுப்பு-வெள்ளை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.   அந்த வீடியோவில் உயரமான சுவர் கொண்ட அந்த வளாகத்தை அமெரிக்கப் படை வீரர்கள் நடந்து சென்று நெருங்கும் காட்சி  பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரை நோக்கி, தரையிலிருந்து தாக்குதல் நடத்துபவர்களை ராணுவம் தாக்கி அழிக்கும் காடி அடங்கிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.  ஐ எஸ் தலைவன் அல் பாக்தாதி பதுங்கியிருந்த வளாகம் தாக்குதலுக்கு முன்னர் எப்படியிருந்தது, தாக்குதலுக்குப் பிறகு எப்படியிருந்தது என்பது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை  வெளியிட்டுப் பேசிய பென்டகன் உயரதிகாரி கென்னத் மெக்கன்சியிடம் செய்தியாளர்கள் அமெரிக்க வீரர்களின் தாக்குதலைத் தொடர்ந்து, கதறி அழுதபடி சுரங்கப் பாதை வழியே அல்-பாக்தாதி தப்பிச் செல்ல முயன்றான் என அதிபர் டிரம்ப் வர்ணித்திருந்தது பற்றி கேள்விகள்  எழுப்பினர்.

ஐ எஸ் தலைவன் அல்-பாக்தாதி தனது கடைசி நிமிடங்களில் இரண்டு சிறார்களுடன் ஒரு துளை வழியாக ஊர்ந்து சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்து தன்னைத்தானே தகர்த்துக் கொண்டதாக மெக்கன்சி தெரிவித்துள்ளார்.

தாழ்வாகப் பறந்த அமெரிக்க வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர்களை நோக்கிச் சுட்டவர்களும் தாக்கி  அழிக்கப்பட்டதாக விளக்கமளித்த மெக்கன்சி. தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட 2 பேர் குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டர்.   இந்த தாக்குதலில்  ஏராளமான ஆவணங்களும், கணினி பதிவுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக  அவர் கூறினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஈராக் சிறையில் அல் பாக்தாதி அடைக்கப்பட்டிருந்தபோது பதிவு செய்யப்பட்டிருந்த டிஎன்ஏ-வுடன் ஒப்பிட்டு அவனது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அல் பாக்தாதி தப்பிச் செல்ல முயன்ற சுரங்கத்தின் வழியே அவனைத் துரத்திச் சென்ற பாதுகாப்புப் படையினரின் நாய் குறித்த விவரங்களையும், அது காயமடைந்தாலும் பணிக்குத் திரும்பியதையும் அவர் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி