கண்டபடி திட்டு வாங்கும் இந்திய கால் செண்டர் ஊழியர்கள்!

டில்லி

வெளிநாடுகளுக்காக இந்தியாவில் உள்ள கால் செண்டர் (பிபிஓ) வில் பணி புரிபவர்களை அங்குள்ளவர்கள் திட்டுவதாக தகவல் வந்துள்ளது.

அமெரிக்கா போன்ற பல வெளிநாடுகள் இந்தியாவில் பி பி ஓ என அழைக்கப்படும் கால் செண்டரை நடத்தி வருகின்றன.  இங்குள்ளவர்களை பணியில் அமர்த்தி அவர்களை  வெளிநாட்டவர் போல ஆங்கிலம் பேச பழக்கி வைத்து,  பெயரையும் வெளிநாட்டுப் பெயரைச் சொல்ல வைக்கின்றனர்.  அங்குள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்கள் வெளிநாட்டவரைப் போல் பதில் அளிக்க வேண்டும்.  வெளிநாட்டு வங்கிகள், உபயோகப் பொருட்கள் தயாரிப்போர் என பல்வகையான துறைகளிலும் இவர்கள் பணிக்கு அமர்த்தப் படுகின்றனர்.

ஆனால் அங்குள்ளவர்கள் இவர்களால் தங்களின் வேலை வாய்ப்பு பணி போகிறது என மிகவும் கோபத்துடன் உள்ளனர்.  அதனால் பல சமயங்களில் இந்த பணியாளர்களை கண்டபடி திட்டுவது சகஜமாக உள்ளது.  அடிக்கடி ”வேலைவாய்ப்புத் திருடர்கள்” என்னும் வசவை இவர்கள் கேட்க வேண்டி உள்ளது.

இது குறித்து அங்கு பணி புரியும் பெண் ஒருவர், “திட்டு வாங்குவது என்பது தினசரி நடக்கிறது.  ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை திட்டு வாங்குகிறோம்.  பேச்சு நடுவில், யு..  இந்தியன் என ஏதாவது ஒரு வார்த்தையை இடையில் இட்டு பேசுவது அவர்களுக்கு வாடிக்கை ஆகி விட்டது.  நான் பலமுறை கழிவறக்கு சென்று அழுதுவிட்டு திரும்புவேன்” எனக் கூறினார்.

மனோதத்துவ நிபுணர் ஒருவர், “இது போல தினமும் வசவுகளைக் கேட்பதால் அந்த ஊழியர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நேர வித்தியாசம் காரணமாக அவர்கள் இரவுப் பணியில் மட்டுமே உள்ளனர்.  அப்படி இருக்க மன உளைச்சலும் சேர்ந்துக் கொண்டால் அது மேலும் சிக்கலை உண்டாக்கும்” எனத் தெரிவிக்கிறார்.

ஊழியர் ஒருவர் ”இது போல வேறு ஒரு பெயரில் பணி புரிவதால் பணி நேரம் முடிந்தும் எனது உண்மைப் பெயர் என் நினைவுக்கு வருவதில்லை.  நான் எனது சுயத்தை இழந்து வருகிறேன்” எனக் கூறி உள்ளார்

.