சென்னை: தீபாவளியன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

காற்று மாசு, கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகஅரசு தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்ததுள்ளது. அதன்படி,  காலை 6 மணி முதல் 7 மணி வரையும்.. இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இரு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. அதன்படி,  பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது.   அதன்படி தமிழகத்தில் கடந்த ஆண்டு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை  இன்னும் ஒரு வாரத்தில், கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசுகளின் அருகில் தீப்பற்றும் பொருட்களை வைக்கக்கூடாது, குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடரால் ஏற்கனவே பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டிகைக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சில மாநிலங்கள் தடை போட்டுள்ளது, பட்டாசு தொழிலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற கோரி பட்டாசு தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் மத்திய மாநிலஅரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.