ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு : அதிருப்தியில் மக்கள்

தராபாத்

தராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டதில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் வருடம், மே மாதம் 18 ஆம் தேதி  ஐதராபாத் நகரில் உள்ள மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.   அப்போது அங்கு நடந்த குண்டு வெடிப்பில் பலர் மரணம் அடைந்தனர்.  நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.     அதை ஒட்டி நடந்த போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் பலர் மரணம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என கருதப்பட்ட சாமி அசீமாநந்த் உட்பட பல இந்து அமைப்பாளர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது.    நேற்று இந்த வழக்கின் தீர்ப்பில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   இந்த தீர்ப்புக்கு ஐதராபாத் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.    குறிப்பாக இந்த குண்டு வெடிப்பில் மரணம் அடைந்தோரின் உறவினர்கள் தங்களுக்கு அநீதி வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முகமது ஓமர் என்பவர். “மெக்கா மசூதி வாசலில் பழ வியாபாரம் செய்யும் முகமது ஜாபருக்கு எனது சகோதரியை திருமணம் செய்து கொடுத்தோம்.   அந்த திருமணம் முடிந்து எட்டு மாதங்களே ஆகி இருந்த நிலையில் அவர் 2017ஆம் வருடம் மே மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது குண்டு வெடித்ததில் கட்டிடத்தில் இருந்த கற்கள் பறந்து வந்து அவரை தாக்கி உள்ளது.   படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மரணம் அடைந்தார்.   அவருடைய மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் படாதது மிகவும் வருத்தத்தை உண்டாக்கி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதே குண்டு விபத்தில் கைது செய்யப்பட்ட இம்ரான் என்பவர் 18 மாத சிறை வாசத்துக்குப் பின் சாட்சியம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.    அவர் இந்த தீர்ப்பு குறித்து, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே விடுவிக்கப்பட்டு விட்டனர் என்றால் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார்? மாநில காவல்துறை,  சிபிஐ உட்பட அனைவருமே தவறாக முடிவு செய்துள்ளனரா?  இந்த தீர்ப்பை எதிர்த்து இவர்கள் நிச்சயம் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

வழக்கில் கைது செய்யப்பட்ட சாமி அசீமாநந்த் முதலில் இந்த குண்டு வெடிப்பில் தனக்கு சம்மந்தம் உள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.    ஆனால் பிறகு அவர் தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.   அது குறித்து தீர்ப்பில் ஒன்றும் சொல்லப்படவில்லை.   மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்படாத என்னைப் போல் பலர் சிறையில் அடைக்கப்பட்டோம் .   அது குறித்தும் தீர்ப்பில் குறிப்பிடவில்லை.” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.