கோவில்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி அடுத்துள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி செண்பகா நகர். இந்த பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகிறார்கள். இங்கு உள்ள மக்களுக்கு இலுப்பை யூரணியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் எம்.ஜி.ஆர். சேவா சங்க செயலாளர் முருகன் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் கோவில்பட்டி புதுக்கிராமம் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த மக்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தையில் கூறியது போல் தண்ணீர் வழங்கப்படவில்லை என்றால் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதே நேரத்தில் அருகே உள்ள சிந்தாமணி நகர் பகுதிக்கும் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. 2 நாட்களில் அந்த பகுதிக்கு தண்ணீர் வழங்க வேண்டும். இல்லை என்றால் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.