குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

வேப்பந்தட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பெரும்பாலான ஊர்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கை.களத்தூர் ஊராட்சியில் உள்ள சிறுநிலா கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை திடீரென ஒன்று திரண்டு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வேப்பந்தட்டை- வெள்ளுவாடி சாலையில் சிறுநிலா பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் மற்றும் கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உடனடியாக லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பொதுமக்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீக்கப்படும்.

மேலும் விரைவில் சம்பந்தப்பட்ட பகுதியில் கூடுதலாக 2 குழாய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வேப்பந்தட்டை- வெள்ளுவாடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.