ஆளுங்கட்சி வேட்பாளர் வென்றால் மட்டுமே தொகுதிக்க நல்லது நடக்கும் என மக்கள் தெளிவான முடிவில் இருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து மக்கள் தெளிவான முடிவில் இருக்கிறார்கள். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால்தான் தொகுதியில் நல்லது நடக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே, இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நான்குனேரி பகுதியில் குடிநீர் பிரச்னை பெரிய பிரச்னையாக இருக்கிறது. தாமிரவருணி-கருமேனியாறு – நம்பியாறு வெள்ள நீர் கால்வாய் திட்டம் விரைவாக நடைபெற்று வருகிறது. 2020ல் இந்தப் பணி முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்ற ஹெச். வசந்தகுமார் தனது பதவி காலத்தில், எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை.

தேர்தல் நேரத்தில் இந்தப் பகுதியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி மக்களை நேரடியாகச் சந்திக்கவில்லை. நாங்கள் கிராமம் கிராமமாக சென்று மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரித்து வருகிறோம். இந்த இடைத்தேர்தலுக்கு பின்னர், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பலம் 122ல் இருந்து 124ஆக உயரும்” என்று தெரிவித்தார்.