கூட்டத்தினரை முட்டாள் என்று திட்டிய தங்கர்பச்சான்!:  எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

நேற்று சேலத்தில் நடைபெற்ற நியூஸ் 18 விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், கூட்டத்தினரை பார்த்து முட்டாள் என்று திட்டயதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

“50ஆண்டுகள் திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்ததா வீழ்ச்சியடைந்ததா” என்ற தலைப்பில் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் நேற்று சேலத்தில் விவாதமேடை நடந்தது.

வளர்ச்சி அடைந்தது என்ற அணியின் தலைவராக கம்பம் செவ்வேந்திரன் கலந்துகொண்டார். அவருடன் வழக்கறிஞர் அருள்மொழி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வளர்ச்சி அடையவில்லை என்கிற அணியின் சார்பில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், எச்.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

இயக்குனர் தங்கர்பச்சான் பேசும்போது, தனது வழக்கமான பாணியில் விமர்சனங்களை  எடுத்துவைத்தார். மேலும், “ திராவிடத்தை சொல்லி கர்னாடகத்தில் இருந்து தண்ணீர் வாங்குங்கள் பார்க்கலாம்” என்றார்.

மேலும், இயக்குநர் தங்கர்பச்சான், “நாஞ்சில் சம்பத் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் பா.ம.க கொடி உயரப் பறந்த காட்சி பற்றிக் கூறி என்னை சாதிக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

பேச்சு வேகத்தில் பார்வையாளர்களைப் பார்த்து இரண்டு முறை, முட்டாள்களே.. முட்டாள்களே.. என்று திட்டினார்.

இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் குறுக்கிட்டு, அவரை மன்னிப்பு கேட்க வேண்டும் முழக்கமிட்டனர்.  இதற்கிடையே இன்னொரு தரப்பினர் தங்கர்பச்சானுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.

இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே வழக்கறிஞர் அருள்மொழி பேசியபோதும், எச்.ராஜா பேசியபோதும் சிலர் கூச்சலிட்டனர்.

அவ்வப்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டாலும் முழு நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்து முடிந்தது.