கொல்கத்தா:  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தில் ஏன் ஒருவரும் இறக்கவில்லை என்ற கேள்வி மூலம் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது; “மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கி வாசலில் 2-3 மணி நேரம் காத்துக் கொண்டிருந்த போது கிட்டத்தட்ட 100 பேர் இறந்து போனதாக மாநில முதலமைச்சர் ம்ம்தா கூறியிருந்தார்.  ஆனால் தற்போதைய குளிரான தட்பவெப்ப நிலையில் (4-5 டிகிரி செல்சியஸ்) கூட பெண்களும் குழந்தைகளும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது.“

அவர்கள் இவ்வளவு உற்சாகத்துடன் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருவதற்கான காரணத்தை அறிய விரும்புவதாகக் கூறிய கோஷ், “அவர்கள் எந்த அமிர்தத்தை உட்கொண்டார்கள் அல்லது அவர்களுக்கு என்ன ஊக்கத் தொகை கிடைக்கிறது?“, என்றும் கூறினார்.

பின்னர் தானே ஒரு காரணத்தை சுட்டிக்காட்டினார். “நான் அதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகக் கருதுகிறேன். மக்கள் ஷாஹீன் பாக் பற்றி மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதற்கான காரணம், அங்கு இரவும் பகலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், இவ்வாறு தொடர்ந்து போராடுவதற்கு ஒரு நாளைக்கு சன்மானமாக ரூ.500 வரை பெறுவதாக்க் கூறுகிறார்கள். இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்“ , என்று கூறியுள்ளார்.

ஷாஹீன் பாக் இல் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் ஆர்ப்பாட்டமானது, சிஏஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களின் முகமாக மாறியுள்ளது. இது, கொல்கத்தா, மும்பை மற்றும் உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜ் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற போராட்டங்களுக்கு ஊக்கமளித்துள்ளது.

இம்மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு திலீப் கோஷ் ஒன்றும் புதியவரல்ல. கடந்த 12ம் தேதியன்று, பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசம், அசாம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களை ”நாய்களை” போல் சுட்டதற்காகப் பாராட்டுவதாகவும், அதே சமயத்தில் ம்ம்தா பானர்ஜி அவ்வாறு செய்யாததற்கு அவரைக் கண்டிக்கவும் செய்தார்.