விசாரணைஆணையங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:

மிழக அரசு அமைத்து வரும்  ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான விசாரணை ஆணையம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டது தொடர்பாக, அதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இந்த கருத்தை தெரிவித்து உள்ளது.

சென்னை அண்ணாசாலையில்,  ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அந்தக் கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம், அடுத்து பதவி ஏற்ற ஜெ.அரசால்  அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம்,  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் துணை முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருக்குப் பல்வேறு வினாக்களை எழுப்பி  நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து  சென்னை உயர்நீதி மன்றத்தில் கருணாநிதி தொடுத்த வழக்கில் 2015ம் ஆண்டு விசாரணை ஆணையத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு, கடந்த வாரம் நீதிபதி சுப்பிரமணியம் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆணையத்துக்காக நிதி ஒதுக்கி வருவதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சுப்பிரமணியம், அரசுக்ள் அமைக்கும்   ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டது.  இது போன்ற  ஆணையங்கள் அமைத்து வரிப்பணத்தை அரசு  வீணடிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசால் இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? அதற்காக எத்தனை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பதிலளிக்கத் தமிழக அரக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.