7ந்தேதி ரெட் அலர்ட்: ‘மக்கள் பீதி அடைய வேண்டாம்:’ வருவாய் ஆணையர் தகவல்

சென்னை:

மிழகத்தில் இந்திய வானிலை மையம்  அறிவித்துள்ள ரெட் அலர்ட் குறித்து மக்கள் பீதி அடைய தேவை யில்லை என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் வரும் 7ந்தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்கள் பலத்த மழை நீடிக்கும் என்றும், வரும் 7ந்தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் ஆணையர் சத்யகோபால்,  மழை காரணமாக மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் கூறினார்.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 15 பெரிய அணைகள் நிரம்பி உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அணைக்கு நீர்வரத்து, இருப்பு பற்றிய தகவலை வழங்க வேண்டும் என அணை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் 60-80 பேரும், இதர மாவட்டங்களில் 45-50 பேரும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  தேவையெனில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் அழைத்துக் கொள்ளப்படும் என்று கூறி உள்ளார்.

குறைந்த நேரத்தில் மிக அதிகளவு கனமழை பெய்வதையே ரெட் அலர்ட் என அழைக்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'People do not panic' about 7th Red Alert: said Revenue Department Commissioner, 7ந்தேதி ரெட் அலர்ட்: 'மக்கள் பீதி அடைய வேண்டாம்:' வருவாய் ஆணையர் தகவல்
-=-