சென்னை

காற்றாலை மின் உற்பத்திக் குறைவு என்பதால் தமிழ்நாட்டில் மின் வெட்டு வருமோ என மக்கள் ஐயமுற்றுள்ளனர்.

தமிழ் நாட்டில் காற்றாலை மின்சாரம் மூலம் சமீபகாலமாக மின் பற்றாக்குறை இன்றி காணப்படுகிறது.   கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தினமும் 3 முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்து வந்தது.   தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து காற்றாலைகளும் முழு அளவில் மின்சாரம் அளித்து வந்தது.

தற்போது கடந்த ஒரு வாரமாகவே காற்று வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கு மேல் குறைந்துள்ளது.  அதுவும் சில நாட்களில் குறைந்த பட்சமாக 129 மெகா வாட் மட்டுமே உற்பத்தி ஆனது.   இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் மின் வெட்டு வரலாம் என ஒரு ஐயம் உருவாகி உள்ளது.  அதற்கேற்றார்போல் நகரின் பல பகுதிகளிலும் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது.

இது குறித்து மின் துறை அதிகாரி ஒருவர், “தற்போது காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளது உண்மையே.  ஆனால் அதற்கு பதிலாக அனல் மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி அதிகமாகி உள்ளது.  காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருந்த காலத்தில் அனல் மின் நிலையங்களில் தேவையான பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன.  அவைகள் தற்போது இயங்கத் தொடங்கி விட்டன.  எனவே மின்வெட்டு வராது.

மின்சாரம் அடிக்கடி தடை படுவது இல்லை.   வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் ஏ சி போன்ற மின் சாதனங்களை பலரும் உபயோகப் படுத்துவதால் மின் அழுத்தம் குறைகிறது.  சில நேரங்களில் டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்படுகிறது.  அதனால் தான் இந்த தற்காலிக மின் தடை ஏற்படுகிறது.   அவையும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விடுகின்றன.  புதிய அனல் மின் நிலையங்களை அமைக்கும் பணியிலும் மின் வாரியம் ஈடுபட்டு வருகிறது.” எனக் கூறினார்/