அலகாபாத்: கோவிட்-19 நோயாளிகளை, ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் சாக விடுவது, இனப்படுகொலைக்கு குறையாத குற்றம் என்று மிகக் கடுமையாக சாடியுள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

மேலும், இதுவொரு கிரிமினல் குற்றமாகும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து சாடியுள்ளது நீதிமன்றம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மற்றும் லக்னோ மாவட்டங்களில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், பல கொரோனா நோயாளிகள் இறப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

“ஆக்ஸிஜன் கிடைக்கவில்‍லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் மரணமடையும் கொரோனா நோயாளிகளின் நிலையை நாங்கள் துயரத்துடன் நோக்குகிறோம். மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை சப்ளை செய்யாமல் இருப்பது கிரிமினல் குற்றம் மற்றும் இனப்படுகொலை என்பதற்கு இது சற்றும் குறைவில்லாத ஒரு செயல்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதய மாற்று அறுவைசிகிச்சை மற்றும் மூளை அறுவை சிகிச்சைகள் நடைபெறும் அளவிற்கு, அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ள இந்த யுகத்தில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பதை நம்மால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்” என்றுள்ளனர் நீதிபதிகள் சித்தார்த்த வர்மா மற்றும் அஜித் குமார்.

மேலும், இதுதொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொள்ளும்படி, லக்னோ மற்றும் மீரட் மாவட்டங்களின் மாவட்ட நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது உயர்நீதிமன்றம்.