குன்னூரில் ஸ்வீப் புளுமவுண்டன் திட்டத்தை தொடங்க கலெக்டர் வருகை தர இருப்பதாக கூறி, கடைகளில் சேகரித்து வைக்கப்பட்ட குப்பைகளை அதிகாரிகள் சாலையில் கொட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும், குப்பையில்லா மாவட்டமாக மாற்றவும் மாவட்ட நிர்வாகம், ‘ஸ்வீப் புளுமவுண்டன்’ என்ற பெயரில் பல இடங்களிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குன்னூர் உலிக்கல் பேரூராட்சி சார்பில் சேலாஸ் பகுதியில் இந்த திட்டம் நேற்று   துவங்கப்பட்டது. இதற்காக மாவட்ட கலெக்டர் வருவதற்கு முன் அதிகாரிகள் அங்குள்ள கடைகள் அருகே சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை சாலையில் கொட்டினர்.

தொடர்ந்து அங்குவந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு அதிகாரிகள் சாலையில் குப்பைகளை போட்டார்களா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள்  சாலையில் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.