சென்னை மெட்ரோ :  நிலம் அளிக்க தி நகர், நுங்கம்பாக்கம் மக்கள் எதிர்ப்பு

சென்னை

சென்னை மெட்ரோ அமைக்க நிலம் அளிக்க தி நகர் மற்றும் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரெயில் பணிகளின் மூன்றாம் கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.   இதற்கான மண் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.   இது சிறுசேரியில் இருந்து மாதவரம் வரை அமைக்கப்பட உள்ளது.   அடுத்ததாக நான்காம் கட்ட பணியும் தொடங்க உள்ளது.  இதில் சென்னை கோடம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் ரோடு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதில் கோடம்பாக்கம் நிலையம் அமைக்க சென்னை தியாகராய நகரில் உள்ள தியாகராய நகரில் பல குடியிருப்புகள் உள்ள இடங்களில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.   அதே போல் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு நிலையம் அமைக்க அங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் தனியார் பள்ளியான குட் ஷெப்பர்ட் கான்வெண்ட் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பகுதிகளிலும் நிலம் கையகப்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி தி நகர் பகுதியில் உள்ள மக்கள் இது குறித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து பிரதமருக்கு மனு அனுப்பி உள்ளனர்.  அந்த மனுவில், “நாங்கள் இரண்டு தலைமுறைக்கு மேல் இங்கு வசித்து வருகிறோம்.  திடீரென எங்களை இங்கிருந்து காலி செய்ய சொல்வது முறை அல்ல.   இதனால் 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட நேரிடும்.

எங்கள் வாழ்வாதாரம் மற்றும் எங்கள் குழந்தைகளின் கல்வி ஆகியவை இதனால் பாழாக நேரிடும்.   அது மட்டுமின்றி இந்த அறிவிப்பால் எங்கள் குடும்பத்தை சேர்ந்த பல முதியோர் மனதளவில் கடுமையாக பதிக்கபட்டுள்ளனர்.   எனவே இதை கருத்தில் கொண்டு இந்த நில கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த அறிவிப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்ட் கான்வெண்ட் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் முதல் வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகளும் இடிக்கப்பட உள்ளன.  இது குறித்து பள்ளி நிர்வாகம் வழக்கு ஒன்றை பதிந்துள்ளது.    தற்போது இந்த திட்டத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் மாணவிகளின் பெற்றோர்கள் அமைதியாக உள்ளதாகவும் ஆனால் நடவடிக்கை தொடங்கினால் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.