15 லட்சம் தருகிறதா மத்திய அரசு ?: தபால் நிலையம் முன்பு குவிந்த பொதுமக்கள்

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால், சம்பந்தப்பட்ட நபரின் புதிய வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் மத்திய அரசு டெபாசிட் செய்யும் என கிளம்பிய வதந்தியால், மூணார் பகுதி தபால் நிலையங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பிரதமராக மோடி வெற்றி பெற்றால், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, அவை நபர் ஒருவருக்கு 15 லட்சமாக பிரித்துக் கொடுக்க முடியும் என்று வாக்குறுதி அளித்து பாஜக தேர்தலை கண்டது. கருப்பு பணம் மீட்கப்பட்டுவிட்டதாக சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தாலும், சொன்ன படி யாருக்கும் 15 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் பாஜக அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாக காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால், சம்பந்தப்பட்ட நபரின் புதிய வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் மத்திய அரசு டெபாசிட் செய்யும் என கிளம்பிய வதந்தியால், காலை 6 மணி முதல் மூணார் பகுதி தபால் நிலையங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர். இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள், அதுபோன்ற எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று கூறியும், மக்கள் நம்பாமல், பல மணி நேரம் காத்திருந்து சேமிப்பு கணக்குகளை தொடங்கினர்.

கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், பாஜக பல தொகுதிகளில் 30% வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றிருந்தது. இதனால் பாஜகவின் செல்வாக்கை குறைப்பதற்காகவே காங்கிரஸ் இவ்வாறு செயல்படுவதாக பாஜக மாநில நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.