டெல்லி:

செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டொபசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று டிசம்பர் 30ம் தேதிக்குள் செலுத்த தவறிய மக்களிடம் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பல கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.

உண்மையாக பாதிக்கப்பட்ட இத்தகைய மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஆனால், அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்யும் வகையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதில் ஒருவர் தனது புத்தகத்தினுள் ஆயிரம் ரூபாய் இருந்துவிட்டது. அது இப்போது தான் தெரிந்தது என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு உரிய விளக்கத்துடன் ரிசர்வ் வங்கி கிளைகளில் இந்த பணத்தை மார்ச் 31ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.

இது பெருந் தொகைக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களை தூக்கி கொண்டு ரிசர்வ் வங்கிக்கு அலைவது சாத்தியமில்லை என்று கருத்து எழுந்துள்ளதால் ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் என்று வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

86 சதவீதத்துக்கு மேல் புழக்கத்தில் இருந்த ரூ. 15.4 லட்சம் கோடி மதிப்பிலான ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து வங்கிகளில் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டது. தற்போது இந்த முழு தொகையும் வங்கியில் செலுத்தியாகிவிட்டது. ரூ. 2.5 லட்சம் கோடி திரும்ப வராது என்ற எதிர்பார்ப்பு பொய்த்துபோனது என்பது குறிப்பிடத்தக்கது.