நெம்மேலி மயான இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், பொதுமக்களே இணைந்து சாலையை சீரமைத்த சம்பவம் அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், நெம்மேலி ஊராட்சியில் நெம்மேலி, பேரூர், நெம்மேலி மீனவர் பகுதி, புதிய கல்பாக்கம் மீனவர் பகுதி மற்றும் சூளேரிக்காடு கிராமங்கள் உள்ளன. இவர்களுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்லும் இணைப்பு சாலை கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்தது. சாலையை சீரமைக்க வேண்டும் என்று மேற்கண்ட பகுதி மக்கள் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தனர். அத்துடன் கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பினர்.

இருப்பினும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. போதிய நிதி இல்லாததால் தற்போது சாலையை சீரமைக்க முடியாது என்று நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர். சாலை சரியில்லாததால் சடலத்தை கொண்டுசெல்வதில் மக்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் ஊர்மக்களே சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். இதன்படி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு மயானத்துக்கு செல்லும் சாலையில் ரப்பீஸ், மண்கொட்டி சீரமைத்தனர்.