சென்னை

சென்னை அம்பத்தூர் அருகே தமிழக வீட்டு வசதி வாரிய 19 அடுக்கு குடியிருப்புக்களுக்கு இடையே கொரோனா வார்ட் அமைக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.

சென்னை நகரில் உள்ள அம்பத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டு பகுதியில் கலைவாணர் நகர் உள்ளது.  இங்கு தமிழக வீட்டு வசதி வாரியம் 19 அடுக்கு மாடிகள் கொண்ட குடியிருப்பை அமைத்துள்ளது,   இங்கு 11 பிளாக்குகளில் 2394 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.  இவற்றில் இதுவரை 5 பிளாக்குகள் விற்கப்பட்டு அவற்றில் 822 பேர் வசித்து வருகின்றனர்.  மீதி 6 பிளாக்குகள் காலியாக உள்ளன.

கடந்த 22 ஆம் தேதி சுகாதாரத்துறை அதிகாரிகள் காலியாக உள்ள வீடுகளில் கொரோனா தனிமை வார்டுகளை அமைத்துள்ளனர்.   அதன் பிறகு நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் இங்குத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   இந்த பகுதியில் உள்ளோர் இதை எதிர்த்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

அதிகாரிகள் தாங்கள் காலியாக உள்ள வீடுகளை மாநகராட்சி நிர்வாகத்துக்கு வாடகைக்கு அளித்துள்ளதாகக் கூறி விட்டனர்.  கடந்த 3 ஆம் தேதி இங்கு குடியிருப்போர் குடியிருப்பு வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  அங்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்திய போது அங்குள்ளோர் கொரோனா வார்டுகளை உடனடியாக அகற்றக் கோரிக்கை விடுத்தனர்.

கால்வதுறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.   ஆயினும் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து இங்கு அழைத்து வரப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  எனவே கோபமடைந்த வீட்டு உரிமையாளர்கள் காலி செய்யப்போவதாக அறிவித்து 28 ஆம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தினர்.   அம்பத்தூர் காவல்துறையினர் அங்கு வந்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் உறுதி அளித்தனர்.

அதையொட்டி கலைந்து போன மக்கள் கொரோனா வார்டு அகற்றப்படாததால் ஆத்திரம் அடைந்துள்ளனர்.  அங்கு வசிப்போர் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆத்திரம் அதிகரித்தது.  அதையொட்டி 250க்கும் அதிகமானோர் நேற்று வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் வீட்டு ஒதுக்கீடு ஆணையைத் திரும்ப அளித்துள்ளனர்.

மக்கள் இதுவரை தாங்கள் கட்டிய பணத்தைத் திரும்ப அளிக்கக் கோரிக்கை விடுத்தனர்.  அதிகாரிகள் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் எனக் கூறியும் மக்கள் மாலை 3 மணி வரை அங்கேயே காத்திருந்தனர்.    நேற்று முக்கிய உயர் அதிகாரிகள் இல்லாததால் இன்று மாநகராட்சி, வீட்டு வசதி வாரியம், குடியிருப்போர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக உத்தரவாதம் அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.