அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேச விரோதிகள் அல்ல : உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

டில்லி

ரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லோரும் தேச விரோதிகள் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கூறி உள்ளார்.

தற்போதைய நிலையில் மத்திய அரசின் எந்த ஒரு முடிவுக்கும் அல்லது கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள் மற்றும் தேச விரோதிகள் எனத் தெரிவிப்பது அதிகரித்து வருகிறது.    இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  நேற்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கலந்துக் கொண்டார்.

தீபக் குப்தா தனது உரையில், “சமீப காலமாக நாட்டில் நடக்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு, குடிமக்கள் பதிவேடு எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் மக்கள் பலர் கலந்துக் கொள்கின்றனர்.  அவற்றில் பங்கு கொள்பவர்கள் அரசின் கருத்துக்கு எதிராக உள்ளனர்.   ஆகவே அவர்களைச் சிலர் தேசத் துரோகிகள் எனச் சொல்கின்றனர்.

தேர்தலில் ஒரு கட்சிக்கு 51% வாக்குகள் கிடைத்தால் ஆட்சி அமைக்கலாம்.  ஆனால் மீதமுள்ள 49% மக்கள் அரசுக்கு எதிராக எதுவும் சொல்லாமல் வாய் மூடி இருக்க மாட்டார்கள்.   ஒவ்வொரு குடிமகனுக்கு ஜனநாயகத்தில் உரிமை உள்ளது.  அரசு எடுக்கும் முடிவுகள் எப்போதுமே சரியானவையாக இருக்காது.  எனவே கருத்து வேறுபாடு ஏற்படும் போது எதிர்ப்பு உருவாகும்.

அரசை எதிர்த்து கேள்வி கேட்பது என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி ஆகும்.  எதிர்க்கட்சியினர் எத்தனை காலம் வேண்டுமானாலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு.   அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேசவிரோதம் என முத்திரை குத்துவது ஜனநாயகத்தின் இயக்கத்தை நிறுத்தும் செயலாகும்.

ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்து மற்றும் எதிர்ப்புக் கருத்து முக்கியமானதாகும்.  அவற்றை அங்கீகரிப்பதன் மூலமே நாட்டை சிறந்த முறையில் வழி நடத்திச் செல்ல முடியும்.   இவ்வாறு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயகம் வெற்றி அடையும்.

ஒருவர் மீது தேச விரோத வழக்கு சுமத்தப்பட்டால் அவருக்கு ஆதரவாக வழக்கிட மாட்டோம் என வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் போட்டதை நான் கண்டிக்கிறேன்.  சட்ட நெறிமுறைகளுக்கு இது விரோதமானது.   எனக்கும் சில நேரங்களில் சில தீர்ப்புகள் மீது உடன்பாடு இருக்காது.  ஆயினும் நான் தீர்ப்பு வழங்கும் அமர்வில் இருக்கும் போது நீதியின் அடிப்படையில் மட்டுமே செயல்படுவேன்.

 

எப்போதும் நீதித்துறை என்பது அச்சமில்லாமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.  ஜனநாயகத்தில் அரசை எதிர்க்கவும் மாற்றுக் கருத்து கூறவும் ஏன் விமர்சிக்கவும் கூட உரிமை உள்ளது.   இவ்வாறு நீதித்துறையையும் ஒருவர் விமர்சனம் செய்யலாம்.   ஏனெனில் நீதித்துறையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது இல்லை” எனக் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி