டில்லி

ஆக்ராவைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது நாட்டை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரசால் 70 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு இந்தியாவிலும் பரவி உள்ளது,

வுகானில் இருந்து திரும்பிய 2 மருத்துவ மாணவர்கள் உட்பட கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்து வீடு திரும்பினர்.  கொரோனா அச்சம் விலகிய நிலையில், இத்தாலியில் இருந்து வந்த டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபருக்கும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும், துபாயிலிருந்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட டெல்லி நபருடன் தொடர்பு கொண்ட ஆக்ராவைச் சேர்ந்த 6 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அவரது குடும்பத்தினரும் அடங்குவர். நாடெங்கும் இது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பரவுவது இந்தியாவில் இதுவே முதல் முறை.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட டெல்லி நபர் மற்றும் அவரது குடும்பத்தினர், அவருடன் தொடர்பு கொண்டவர்களிடம் 2வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலே கண்ட வைரஸ் தொற்று இருப்பதான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. உடனடியாக அந்த 6 பேரும் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் இந்த 6 பேரும் யார், யாருடன் தொடர்பு கொண்டனர் என்ற பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களிடமும் பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இந்த 6 பேரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள்  இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா பரவினால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  ஆகவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாகப் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலும் அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்குப் பின்னர், டில்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ‘டில்லியின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 3.5 லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் கொண்ட 8,000 தொகுப்புகள் கைவசம் உள்ளது,’’ என்றார்.

டில்லி நகரில் கொரோனா பாதித்தவர் உள்ளதால் அந்நகர மக்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.