கொரோனா வைரஸ் உலகில் 70% மக்களைத் தாக்கும் : ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அதிர்ச்சி செய்தி

மாசசுசெட்ஸ்

கொரோனா வைரஸ் உலகில் 70% மக்களைத் தாக்கும் என அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.  இந்த வைரஸ் சீனா முழுவதும் பரவி தற்போது வேறு பல உலக நாடுகளிலும் பரவி உள்ளது.    சீனாவில் மட்டும் சுமார் 2700க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்தனர்.  இந்த வைரஸ் தாக்குதல் தற்போது தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமாக உள்ளது.

இந்த வைரஸ் பல நாடுகளிலும் பரவுவதால் உலக சுகாதார நிறுவனம் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.  அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த வைரஸுக்கான் சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.   உலக மக்கள் அனைவரும் இந்த வைரஸ் தாக்குதலால் கடும் பீதி அடைந்துள்ளனர்.

இதை மேலும் அதிகமாக்குவது போல் ஹார்வர்ட் பல்கலைகழ்க விஞ்ஞானி மார்க் லீப்ஸ்டிச், “உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருகிறது. இன்னும் ஒரு வருடத்துக்குள் உலக மக்களில் குறைந்த பட்சமாக 40% மற்றும் அதிகபட்சமாக 70% பேர் வரை இந்த வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது.  இதில் பெரும்பாலானோருக்கு வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் இருக்காது.

இந்த வைரஸ் பரவுவதை எளிதாகத் தடுத்து நிறுத்த முடியாது.   இதற்கு முன்பு ஏற்பட்ட சார்ஸ் போன்ற வைரஸ் தாக்கினால் அறிகுறிகள் வெளிப்படையாகத்  தெரியும்.   மேலும் இவை ஒரு முறை தாக்கி குணமடைந்தோருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படாத நிலை இருந்தது.  ஆனால் கோவிட் 19 என அழைக்கப்படும்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாது.

மேலும் இந்த வைரஸ் தாக்கி குணமடைந்தோரையும் மீண்டும் இந்த வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.   இந்த வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாததால் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படக்கூடும்.  ஆகவே இந்த வைரஸ் பாதிப்பு அதிக எண்ணிக்கையில் இருக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்