மிகவும் அவசரம்’- காஷ்மீர் அரசு ஆணையால் மக்கள் பீதி…

மிகவும் அவசரம்’- காஷ்மீர் அரசு ஆணையால் மக்கள் பீதி…

’’ இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இப்போதே தயாராக வைத்திருக்க வேண்டும்’’ என காஷ்மீர் மாநில அரசு அங்குள்ள எண்ணை நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘’ இது மிகவும் அவசரம்’’ என்ற குறிப்புடன் காஷ்மீர் மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை இயக்குநர், காஷ்மீர் மாநில எண்ணை நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ள நிலையில், ஆளுநரின் ஆலோசகர் ஜி.சி. முர்மு, அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றிலும் ,’’ சமையல் எரிவாயு சிலிண்டர்களை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும்’’ என  வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே அங்குள்ள கண்டர்பால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ‘’ மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி. கட்டிடம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், நடுத்தர பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களை , மத்திய ஆயுதப்படையினர்  தங்குவதற்கு ஏதுவாக ‘ரெடி’ செய்யுமாறு, மாவட்ட நிர்வாகத்துக்கு  ஆணையிட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரியின் இந்த ஆணையை, தனது டிவிட்டர் பக்கத்தில், சுட்டிக்காட்டியுள்ள ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்- அமைச்சர் உமர் அப்துல்லா’’ இந்த உத்தரவுகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது.

-பா.பாரதி