ராகுல் காந்தியை தவறாக பேசிய பாஜக எம்பி : போராட்டம் செய்த பொதுமக்கள்

பாககோட், ராஜஸ்தான்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தவறாக பேசிய குஜராத் பாஜக எம்பியை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அவரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 7 ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாககோட் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா தொகுதியில் பாஜக சார்பில் ஒரு தேர்தல் பிரசார பேரணி நடந்தது. அதில் குஜராத் மாநில சுரேந்திர நகர் தொகுதியின் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தேவிஜி பாய் கலந்துக் கொண்டார்.

தேவிஜி பாய்

அந்த பேரணியில் தேவிஜி பாய் பேசிக் கொண்டிருந்த போது அந்த பகுதி நகரசபை உறுப்பினரான சீதா தோமர் அங்கு வந்தார். தேவிஜியின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த அவர் அந்தப் பகுதியில் எந்த ஒரு நலத்திட்டமும் நடக்கவில்லை என தெரிவித்தார். அத்துடன் வசுந்தர ராஜேவின் ஐந்து வருட ஆட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதைக் கூட அவர் சரி செய்யவில்லை என குறிப்பிட்டார்.

அதற்கு தேவிஜி பாய் பதில் அளிக்கவில்லை. மாறாக சீதா எந்தக் கட்சியை சேர்ந்த வ்ர் என கேட்டுள்ளார். அதற்கு சீதா தாம் அந்தப் பகுதி நகரசபை உறுப்பினர் எனவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனவும் பதில் அளித்துள்ளார். அதற்கு தேவிஜி பாய் அவரிடம்”நீ போய் பப்புவிடம் கேள் அவன் உனக்கு தேவையானதை செய்வான்” என காங்கிரஸ் தளைவர் ராகுல் காந்தியை ஒருமையில் பேசி உள்ளார்.

அவ்வாறு ஒரு கட்சித் தலைவரைப் பற்றி பேசுவது தவறு என சீதா அதை எதிர்த்துள்ளார். அவர் மட்டுமின்றி அங்கு கூடியிருந்த மக்களும் ஒரு கட்சியின் தலைவரை ஒருமையில் பேசுவதை கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளனர். நிலைமை கட்டுக்கு மீறுவதை உணர்ந்த தேவிஜி பாய் தாம் கூறியதை திரும்பப் பெறுவதாகவும் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்த பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.