பொதுமக்கள் எதிர்ப்பு: ஊருக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்ற எச்.ராஜா

திட்டக்குடி:

ர்ச்சைப் புகழ் எச்.ராஜாவை ஒரு கிராமத்தினர் ஊருக்குள் வர கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அவரை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில்  தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட  மோதல் காரணமாக வழக்கு நிலுவையில்உள்ளது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அங்கு விநாயகர்  சிலையை பிரதிஷ்டை செய்ய பாரதிய ஜனதா கட்சியினர் முடிவு செய்து, அதற்கு தேசிய செயலாளர் எச்.ராஜாவையும் அழைத்திருந்தனர். இது தொடர்பாக  ஊர் முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அவர் வந்தால் இங்குள்ள பிரச்சினை மேலும் தீவிரமடையும், அத்துடன்  மத ரீதியிலான பிரச்சினை எழும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சியின ரும் ஆதரவு தெரிவித்த நிலையில், எச்.ராஜா ஊருக்குள் வருவதை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில், நேற்று மாலை அங்கு வர முயன்ற எச்.ராஜாவுக்கு, கிராம எல்லையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டினர்.  கோயில் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் எ. ராஜா ஊருக்குள்  வரக்கூடாது என்று கிராம மக்கள் கடுமையாக தெரிவித்தனர்.

இதையடுத்து, பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர், எச்.ராஜாவை ஊருக்குள் நுழைய தடை விதித்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.