சென்னைக்கு திரும்பும் மக்கள்: புறநகர்களில் கடும் போக்குவரத்து நெரிசல்!

--

சென்னை:

4 நாட்கள் தீபாவளி விடுமுறை முடிந்து பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பி வருவதால் சென்னையை சுற்றியுள்ள புறநகர்களில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 4 வாகனங்கள் இஞ்ச் பை இஞ்சாக நகர்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வாகனங்களால் மகிந்திரா சிட்டி வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை செவ்வாய்க்கிழமையில் வந்ததால், வெளியூர் செல்லும் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு திங்கட்கிழமை அரசு விடுமுறை விடப்படடது. இதன் காரணமாக 4 நாள் விடுமுறை கிடைத்ததால் சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டினர்.

இன்று அலுவலக நாள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், தீபாவளியை கொண்டாடி முடித்துவிட்டு நேற்று இரவு தங்களது சொந்த ஊரில் இருந்து சென்னை நோக்கி பயணமாகி வருகின்றனர்.

வெளியூரில் இருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக தமிழகஅரசு  10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கி உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கில் தனியார் பேருந்துகளும், சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர, ஏராளமானோர் தங்களது சொந்த  4 சக்கர வாகனங்களில் ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்த வாகனங்கள் இன்று அதிகாலை முதல் சாரை சாரையாக சென்னைக்கு வந்துகொண்டிருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த வாகன நெரிசல் செங்கல்பட்டு மகிந்திரா சிட்டி வரை நீடிப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.