குடும்ப கட்டுப்பாட்டை சட்டமாக்க மக்கள் போராட வேண்டும் : மத்திய அமைச்சர்

டில்லி

குடும்ப கட்டுப்பாட்டை சட்டமாக இயற்ற மக்கள் போராட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்கள் தொகை மிகவும் அதிகரித்து வருகிறது. ஐநா சபை கணக்கின் படி இந்தியாவில் 2017 ஆம் வருடம் 130 கோடி பேர் உள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக தற்போது சீனா இருந்து வருகிறது. வரும் 2024 ஆம் வருடத்துக்குள் இந்திய மக்கள் தொகை சீன மக்கள் தொகையை விட அதிகரிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை பெருக்கம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் யோகா ஆசிரியரும் பதஞ்சலி நிறுவன அதிபருமான பாபா ராம் தேவ், “இந்தியாவில் மக்கள் தொகை இன்னும் 50 வருடங்களுக்கு 150 கோடிக்குள் இருக்க வேண்டும். இதற்கு அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை, அரசு சலுகைகள் உள்ளிட்ட அனைத்தையும் அரசு நிறுத்த வேண்டும்” என கூறினார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது டிவிட்டரில், “இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மக்கள் தொகை பெருக்கம் பெரும் தடையாக உள்ளது. இது சமுதாய முன்னேற்றத்தையும் கெடுத்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் மகக்ள் தொகை கட்டுப்பாட்டுக்காக சட்டம் இயற்ற வேண்டும் என்னும் இயக்கம் தொடங்க வேண்டும். மக்கள் அனைவரும் குடும்ப கட்டுப்பாட்டை சட்டமாக்க அரசிடம் கோரிக்கை வைத்து போராட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி