Random image

தமிழகத்தில் ஆளும் வக்கற்ற, வகையற்ற, அடிமை ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்: ஸ்டாலின்

சேலம்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் ஆளும் வக்கற்ற, வகையற்ற, அடிமை ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்றும், எடப்பாடி ஆட்சியின் 33 அமைச்சர்களும் ஊழல்வாதிகள்தான் என்று கூறினார்.

அதிமுக அரசின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர்  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  சென்னை, காஞ்சிபுரம், கோவை, சேலம், மதுரை, நெல்லை போன்ற  இடங்களில் திமுகவினர் அதிமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்  நடத்தினர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றார்.

சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். சேலம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட தி.மு.க ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க அரசை கடுமையாக தாக்கி பேசினார்.  முதல்வர் உட்பட அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வாசித்தார். “தமிழகத்தில் ஆளும் அநியாய, அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டவும், மோடி தலைமையில் நடைபெறும் மத்திய ஆட்சிக்கு முடிவு கட்டவும்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தமிழக  வரலாற்றில் இப்படி ஒரு ஊழல் அரசை  மக்கள் பார்த்து இல்லை தமிழகத்தில் ஆளும் பேடி ஆட்சி எதற்கும் வக்கற்ற, வகையற்ற, அடிமை ஆட்சி. இதற்கு க்கள்  முடிவு கட்ட வேண்டும். சேலம் மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும், எடுபிடி ஆட்சியில் உள்ள 33 அமைச்சர்களும் ஊழல் பேர்வழிகள்தான். ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் ஊழலை விசாரியுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சொன்னால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மீது பாலியல் புகார் இருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மீதுள்ள பாலியல் புகாரை விசாரியுங்கள் என்று காவல்துறை டி.ஜி.பி.யிடம் சொன்னால் காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் மீது குட்கா புகார் இருக்கிறது. இப்படி எங்கும், எதிலும் ஊழல் நிறைந்திருக்கிறது என்று கூறினார்.

400 கோடியில் பருப்பு ஊழல், அண்ணா பல்கலைக்கழகத்தில் 200 கோடி ஊழல், போக்குவரத்தில் 300 கோடி ஊழல், 1000 கோடியில் முட்டை ஊழல், 89 கோடியில் வாக்கி டாக்கி ஊழல் நடந்திருக்கிறது.

டி.வி. நிகழ்ச்சியில் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டியைப் போல ஊழல் போட்டி நடத்தினால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல 33 அமைச்சர்களும் சிறந்த ஊழல்வாதிகள் என வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.