சென்னை: நிவர் புயல் காரணமாக மக்கள் வெளியே வர வேண்டாம் – சென்னை பெருநகர காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்  விடுத்துள்ளது.

அதிதீவிர புயலாக மாறி உள்ள நிவர் புயல் இன்று இரவு 8 மணி முதல் கரையை கடக்கத்தொடங்கும் என சென்னை வானிலைமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனால் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.இந்த புயலால் தற்போது சென்னை மெரினா கடற்கரை முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்திருப்பதோடு, சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. பல குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை மக்கள் யாரும் இரவு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும்,  சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டு இருப்பதாகவும், மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான அனைத்து சாலைகள் மூடப்பட்டிருக்கும், பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி  என்று தெரிவித்துள்ள சென்னை மாநகர காவல் ஆணையனர், பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.