பாஜக ஆட்சியை வீழ்த்த மக்கள் ஒன்றுபட வேண்டும்…..சிஎஸ்ஐ பேராயர்

திருவனந்தபுரம்:

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சிஎஸ்ஐ நாட்டின் 2வது பெரிய கிறிஸ்தவ அமைப்பாகும். சிஎஸ்ஐ பேராயர் பிஷப் தாமஸ் கே.உம்மன் நாட்டு மக்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ‘‘கேரளா, வடகிழக்கு மாநிலங்ளில் கால் ஊன்றும் வகையில் கிறிஸ்தவ சமுதாய மக்களை வளைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதனால் நாட்டு மக்கள் மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்த ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஆங்கிலேயேர் ஆட்சியை வீழ்த்த உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. அதேபோல் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. நாட்டின் இறையாண்மை, சோசலிசம், மதசார்பின்மை, ஜனநாயக குடியரசு ஆகியவற்றுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்துத்வா கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றி அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருந்த உரிமைகளை பறிக்கிறது.

கார்பரேட் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் உறவு வைத்துக் கொண்டு ஏழைகளிடம் சுரண்டப்படுகிறது. பயிர் கடன் தள்ளுபடி கோரி ஏழை விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் 50 பணக்காரர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஏழைகளை பாதித்துள்ளது. அதனால் இந்த அரசு கார்பரேட்டுக்கு ஆதரவாகவும், ஏழைகளுக்கு விரோதமாகவும் செயல்படுகிறது என்பதில் சந்தேகமில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.