டில்லி

ர்ஃப் எக்ஸெல் விளம்பரத்துக்கு உண்டான எதிர்ப்பை தொடர்ந்து ஒரு சிலர் மைக்ரோசாஃப்ட் எக்ஸெலை பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளனர்.

புகழ்பெற்ற சலவைத் தூளான சர்ஃப் எக்ஸெல்  சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில் ஒரு இந்து சிறுமியும் இஸ்லாமிய சிறுவனும் ஹோலி கொண்டாடுவதைப் போல் அமைந்திருந்தது.  இந்த விளம்பரத்துக்கு சமூக வலை தளங்களில் இந்து சமுதாயத்தினரால் கடும் எதிர்ப்பு எழுந்தது

இந்துக்கள் பண்டிகையை கேவலம் செய்வது போலவும் இஸ்லாமிய பண்டிகைகளை உயர்த்துவது போலவும் இந்த விளம்பரம் உள்ளதாகவும் கருதிய பலரும் இனி சர்ஃப் எக்ஸெலை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதை ஒட்டி பலரும் இந்த நிறுவனங்களின் பொருட்களை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

ஒரு சிலர் சர்ஃப் எக்ஸெல் பாக்கெட்டுகளை எரித்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு அந்த நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். அதை ஒட்டி ஒரு சிலர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற மென்பொருளான மைக்ரோசாஃப்ட் எக்ஸெலை பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளனர்.

மென் பொருள் மற்றும் சலவை பொருள் ஆகிய இரு பொருட்களும் எக்ஸெல் என பெயரிடப்பட்டுள்ளதால் பலர் இரண்டும் ஒரே நிறுவனத்தை சார்ந்தவை என அவர்கள் நினைத்துள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரில் பலரும் மைக்ரோசாஃப்ட் எக்ஸல் இந்துக்களுக்கு விரோதமானது எனவும் பதிந்து வருகின்றனர்.