சிவகாசியில் அடிக்கடி பழுதாகும் குப்பை அள்ளும் வாகனங்களால், குப்பை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டு சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ஏராளமான அச்சகங்களும், தீப்பெட்டி தொழிற்சாலைகளும், பட்டாசு தொழிற்சாலைகளின் அலுவலகங்களும் உள்ளது. 33 வார்டுகள் உள்ள சிவகாசியில் இருந்து தினமும் 40 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை சேகரிக்க 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இந்த நகராட்சிக்கு 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தேவைப்படும் நிலையில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் குப்பைகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் நகரில் பல இடங்களில் குப்பைகள் மலைப்போல் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் குப்பைகளை குறைந்த நேரத்தில் அதிக அளவில் சேகரிக்க வசதியாக கடந்த ஆண்டு மின் ஆட்டோக்கள் வாங்கப்பட்டது. இந்த ஆட்டோக்கள் குறுகிய பாதைகளில் சென்று விரைவாக குப்பைகளை சேகரித்து வந்தன. தற்போது அந்த வாகனங்கள் உரிய பராமரிப்பு இல்லாததால் தள்ளுவண்டியாக பயன்படுத்தப்படுகிறது.

குப்பைகளை சேகரித்து பாரைப்பட்டியில் உள்ள குப்பை கொட்டும் பகுதிக்கு செல்வதற்குள் வாகனங்கள் பழுதாகி விடுகிறது. இதனால் அந்த வாகனங்களை துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியை போல் தள்ளி செல்கிறார்கள்.

இது போன்ற சம்பவங்களால் குப்பைகள் சேகரிப்பதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. நகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காததால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது.