சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மலை வாசஸ்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பான வழக்கின் விசாரணையின்போது ஆஜரான தமிழகஅரசின் வழக்கறிஞர், மலை வாசஸ்தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நிலையில் சுமார் 90 சதவிகித தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக  கோடை வாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவற்றிற்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டாலும், இ-பாஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது ஆஜரான தமிழகஅரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண்,  பொதுமக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை, ஆனால்,  அவர்கள் தங்களது தகவல்களை பதிவு செய்ய வேண்டும்  என தெரிவித்தார்.