ஐதராபாத்:

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடடிவக்கைளை எடுத்து வரும் நிலையில், தெலுங்கான மாநிலத்தில், சிலர்  நோயாளிகள் போல் ஆம்புலன்ஸில் பயணம் செய்து தெரியவந்துள்ளது.

ஆம்புலன்ஸை மடக்கிய காவல்துறையினர், அதை சோதனை செய்தபோது, உள்ளே சிலர் அமர்ந்திருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, பணத்துக்கு ஆசைப்பட்டு, ஆம்புலன்ஸ் டிரைவர் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டதுதெரிய வந்தது.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களை நோயாளி போல, ஆம்புலன்சில் ஏற்றி, ஐதராபாத்தி லிருந்து விஜயவாடாவுக்கு  அனுப்பி வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில்,மாநில எல்லை பகுதியில் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், அநத் வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றில் பொதுமக்கள் சிலர் நோயாளிகள் போல் விஜயவாடாவுக்கு பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், சொந்த ஊருக்கு வரும் ஆசையில், ஆம்புலன்சில் அதிக பணம் கொடுத்து வந்ததாக கூறினர். அவர்களை கைது செய்த காவல் துறையினர்,  ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுனர் ஆகியோர் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும்,  ஆம்புலன்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கொரோனா வைரஸ் நிலைமையின் விபரீதத்தை உணராமல் இதுபோன்ற விபரித பயணங்களை செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.