என்ஆர்சி விவகாரம்: பெயர் விடுபட்டவர்கள் உள்ளூர் அதிகாரிகளை நாடலாம்! உச்சநீதி மன்றம்

--

டில்லி:

சாமில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி), 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், தேசிய பதிவேட்டில், பெயர் விடுபட்டவர்கள் தங்களின் பெயரை சேர்ப்பது குறித்து, உள்ளூர் அதிகாரிகளை நாடலாம் என்று கூறி உள்ளது.

இதற்குரிய படிவத்தை நிரப்பி  ஆகஸ்ட் 7ந்தேதி  முதல் அந்தந்த பகுதிகளை சேர்ந்த  உள்ளூர் அதிகாரிகளை அணுகி வழங்கலாம் என்றும் உச்சநீதி மன்றம்  தெரிவித்து உள்ளது.

அசாமில் அந்த மாநில மக்களுடன் வங்கதேச  அகதிகளும் பின்னி பிணைந்து வசித்து வருகின்றனர். இதன் காரணமாக,  யார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், குடிமக்கள் தேசிய இறுதி பதிவேட்டின் நகல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் சுமார் 40லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து திரிணாமூல் காங்கிஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, இதுகுறித்து யாரும் பீதி அடைய தேவை யில்லை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

ஆனாலும், அதை ஏற்றுக்கொள்ளாத திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று காலை பாராளு மன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்திலும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 2வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது.

இந்த நிலையில், இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், தேசிய குடிமக்கள் பதிவேட்டில், பெயர் விடுபட்டவர்கள், அந்த பகுதியில் உள்ள அரசு அதிகாரிகளிடம் வரும் 7ந்தேதி முதல் அதற்குரிய படிவத்தை நிரப்பி கொடுக்கலாம் என்று கூறி உள்ளது.