”அ.தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்”! தி.மு.கவில் இணைந்த புதுக்கோட்டை அ.தி.மு.க நிர்வாகி நாராயணன்

சென்னை:

”அ.தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்’ என்று தி.மு.கவில் இணைந்த புதுக்கோட்டை அ.தி.மு.க நிர்வாகி நாராயணன் தெரிவித்து உள்ளார்,.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி நாராயணன், தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில்  தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபுடித்துள்ளது. இந்த நிலையில்,  புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ரகுபதி முன்னிலையில், மணமேல்குடி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 14வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணமேல்குடி ஒன்றியக் குழு உறுப்பினருக்கான தேர்தலில் 14வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் நாராயணன் தமது கட்சியின் ஒன்றிய செயலாளரிடம் நான்  நின்றால் தோற்பது உறுதி எனவும், வேறு யாரையாவது போட்டியிடவைக்குமாறும்  தெரிவித்ததாகவும், ஆனால் அ.தி.மு.கவில் சார்பில் ஒருவரும் போட்டியிட  முன்வராத காரணத்தால் நாராயணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் விரக்தியடைந்த அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் தான் போட்டியிட்டு அவமானப்படு வதைவிட திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மக்கள் பணியாற்றுவதே சிறந்தது என முடிவெடுத்து இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் அவரது இல்லத்தில் தன்னை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன்,  அ.தி.மு.க மீது மக்கள் வெறுப்புணர்வு கொண்டிருப்பதாகவும், பொதுமக்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களிக்க தயாராக இல்லை என்பதை தான் முழுமையாக உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.