அமைதியான உறக்கத்திற்கு உதவும் குளிர்பானம் – அறிமுகம் செய்யும் பெப்சிகோ நிறுவனம்!

புதுடெல்லி: தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்களுக்கு உதவும் வகையில் பெப்சிகோ நிறுவனம், ஒரு புதிய பானத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பானம் மனஅழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, உறங்கச் செல்லும் முன்னதாக மனதை இந்த பானம் சாந்தப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலக்கட்டத்தில், மக்களில் பலருக்கும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் அதிகரித்துள்ளது என்பதை பல ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. எனவே, அந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் ஒரு பானத்தை தயாரிக்கலாம் என்று பெப்சிகோ நிறுவனத்தின் ஊழியர்கள் யோசனை தெரிவித்தார்களாம்!

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, பச்சை மற்றும் கருப்பு டீ மற்றும் காளான்களில் காணப்படும் எல்-தியானைன் என்ற அமினோ அமிலம்தான், இந்த பானத்தின் முக்கிய உள்ளடக்கப் பொருள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமினோ அமிலம், அமைதியான உறக்கத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது மற்றும் மனஅழுத்த அறிகுறிகளை குறைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.