தமிழில் முதன் முறையாக சாதிய சிக்கலை மையமாக கொண்ட முழுமையான திரைப்படம் பரியேறும் பெருமாள்!: இயக்குநர் மு.களஞ்சியம்

பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்து இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களது பார்வை. அவரது முகநூல் பக்கத்தில் இருந்து:

perumal

நேற்று இரவு 10.30 மணிக்கு நானும் எனது ஒளிப்பதிவாளர் சிவசுந்தர் அவர்களும் சென்னை தேவிக்கலா திரையரங்கில் பரியேறும் பெருமாள் படம் பார்த்தோம்.அரங்கு நிறைந்த காட்சி.குடும்பம் குடும்பமாக படத்துக்கு தமிழர்கள் வந்திருந்தது அதுவும் இரவுக் கட்சிக்கு ஆச்சரியமாக இருந்தது.

தோழர்கள் இந்த திரைப்படத்தை தவறவிடாமல் விரைவில் குடும்பத்துடன் திரையரங்குகளில் பாருங்கள். திரைப்படம் நிறைய ஆச்சர்யங்களை என்னுள் விதைத்தது. எப்போதாவது ஒருமுறைதான் இப்படி அதிசயம் தமிழ் சினிமாவில் நடக்கும். அப்படியான ஒரு தரமான திரைப்படம் ”பரியேறும் பெருமாள்” இப்படிப்பட்ட ஒரு கதையை கேட்டு,அந்த கதையை படமாக்க வேண்டும் என்கிற துணிச்சலை பெற்ற இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.ஏனெனில் இந்தப் படம் முழுமையாக பா.ரஞ்சித்தின் அரசியலை பேசுகிற திரைப்படம்.இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் பா.ரஞ்சித் போன்றதொரு அறிய கலைஞனை சந்திருக்க விட்டால் இந்த கதையை பாடமாக்கியே இருக்க முடியாது.

இங்கு யாருக்கு இருக்கிறது இந்த அக்கறை?

யாருக்கு இருக்கிறது இந்த துணிச்சல்?

படத்தை எடுத்து அதை தூக்கிக் கொண்டு வியாபரியாகளின் பின்னால் அலையாமல் யார் துணிச்சலோடு சொந்தமாக வெளியிடுவது?

அந்த துணிச்சல் ”இயக்குனர் பா.ரஞ்சித்” அவர்களுக்கு இருந்ததால் தான்,இந்தக் கதை திரைப்படம் என்கிற வடிவத்தை அடைந்திருக்கிறது. இன்றைக்கு இவ்வளவு பெரிய வெற்றியையும் தொட்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சாதிமறுப்பு படைப்புகள் இருந்தன. ”பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா, இறைச்சித்தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ” என்கிற சித்தர் பாடல்களில் இருந்து பாரதி வரை அவை நீண்டாலும் 1990-களில் தலித் இலக்கியம் என்கிற வகைமை தோன்றிய பிறகுதான் தமிழில் தலித் அரசியல் குறித்த முழு உணர்வோடு படைப்புகள் உருவாகின. இதைச் சார்ந்த படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் இதன் பின்புலத்தில் உருவானார்கள்.

ஆனால்,வலிமையானதொரு காட்சி ஊடகமான சினிமாவில் தலித் சினிமா என்றொரு வகைமை உருவாகவே இல்லை. சாதிய படிநிலையின் உச்சியில் இருந்த பிராமணர்களின் ஆதிக்கத்தில் தமிழ் சினிமா இருந்த போது அந்த பின்புலத்தில்தான் படைப்புகள் உருவாகின. புராணக்கதைகளை மறுஉருவாக்கம் செய்ததின் தன்னிச்சையான தொடர்ச்சியாக நந்தனார் போன்ற அபூர்வ விதிவிலக்குகள் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டோர்களின் வலியை அதன் பின்புலத்தோடு முழு வீச்சில் சொன்ன சினிமாக்கள் உருவாகவில்லை.

பிராமணர்களின் அதிகாரம் சற்று தளர்ந்த போது அந்த இடத்தை இடைநிலைச் சாதிகள் கைப்பற்றிக் கொண்டன. நேரடியாக அல்லது மறைமுகமாக அவர்களின் சாதியையும் சாதியத் தலைவர்களையும் நாயகர்களாக ஆராதிக்கும் அவற்றின் தலைப்புகளைக் கொண்ட சினிமாக்கள் உருவாகின. சாதிய மோதல்களுக்கும் வன்முறைகளுக்கும் இவை காரணமாக இருந்தன. தலித்களின் பிரச்சினைகளைப் பற்றி சில திரைப்படங்கள் மிதமாக உரையாடினாலும் அவை அந்தப் படைப்புகளின் ஒரு பகுதியாக இருந்தனவே ஒழிய முழுவதுமாக இல்லை. இதில் முற்போக்கு போலி சினிமாக்களும் கலந்தே இருந்தன.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதிய சிக்கல்களை பேசிய படங்கள் மிகவும் குறைவே.அதுவும் சாதி அரசியலை நேர்மையாகப் பேசிய படங்கள் அதைவிடக் குறைவே.அதிலும் தமிழில் தலித்துகளின் மீதான அடக்குமுறை குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உண்டு. மிகவும் குறைவுதான்.
இப்படியான நேரத்தில் தான் பா.ரஞ்சித் அவர்களின் ”அட்டைக் கத்தி” என்கிற தலித் திரைப்படம் துணிச்சலோடு திரைக்கு வந்தது.முதல் தலித் வாழ்வியலை முழுமையாகச் சொன்ன திரைப்படமும் அது தான்.

மாட்டுக் கறி சாப்பிடுவது குற்றமாக கருதப் படுகிற இந்துத்துவ கொடூரத்தின் ஆட்சி கோலோச்சுகிற இந்த காலத்தில் பா.ரஞ்சித்தின் அட்டைக் கத்தியின் கதாநாயகன் மாட்டுக்கறி சாப்பிட்டான்.
படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த துணிச்சல் தான் இன்றைக்கு ”பரியேறும் பெருமாளாக” வளர்ந்து நிற்கிறது. தமிழில் மிகச் சிறந்த படமாகச் சொல்லப்படும் தேவர் மகன் தென் மாவட்டங்களில் நிலவும் தேவர் – பள்ளர் பிரச்னையைப் பேசாமல் இரு தேவர் குடும்பங்களுக்கு இடையிலான பங்காளி பிரச்னையைப் பேசுவதாக முடங்கிப்போனது. விருமாண்டியோ தேவர் – நாயக்கர் மோதலாக திசை மாறிப் போனது. கிராமத்து மண் வாசனை கமழப் படம் எடுத்ததாகப் புகழப்படும் பாரதிராஜாவும் கூட நிஜ சாதி மோதலை, முரண்பாட்டைப் படமாக்கியதில்லை.
இந்த சூழலில் தான் ”பரியேறும் பெருமாள்” ஒரு முழுமையான சாதிய சிக்கலை மையமாக கொண்ட திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.

perumal

கலை தனது உன்னத வடிவத்தின் மூலம் பார்வையாளனுடன் அந்தரங்கமாக உரையாட வேண்டும். அப்படியொரு அந்தரங்க உரையாடலை என்னுள் நிகழ்த்தியிருக்கிறது ”பரியேறும் பெருமாள்” படம் பார்த்ததில் இருந்து இந்த நிமிடம் வரை ஒரு பதட்டமான மனநிலையில்,”பரியேறும் பெருமாள்” என்கிற ஒரு புள்ளியைச் சுற்றியே நினைவுகள் வட்டமிடுகின்றன.
பல்லாண்டுகளாகத் தொடரும் தீண்டாமைக் கொடுமையை ஒரு கலைப்படைப்பின் மூலமாக சொல்லும் போது எரிமலை நெருப்பின் தகிப்போடுதான் சொல்ல வேண்டும் என்றில்லை. நகக்கண்ணில் மெல்லிய ஊசியேற்றியும் சொல்லலாம் என்பதை ”பரியேறும் பெருமாள்” திரைப்படம் நிறுவி இருக்கிறது.

அதிக திருப்பங்களோ, கிளர்ச்சியடையச் செய்யும் நிகழ்வுகளோயில்லாத எளிய வாழ்வு மிக நுட்பமாகப் பதிவு செய்யப்படிருக்கிறது. சட்டக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் காதல் கதைதான் என்றாலும் அதைத் திரையில் சொன்னவிதம் முகத்திலறைவதாய் இருக்கிறது. அதாவது, கல்லூரிப் பருவக் காதலைச் சொல்வது போல் தலித் அரசியலைப் பேசியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள்.நகைச்சுவையைப் படம் முழுக்க தூவியிருந்தாலும் சாதி அரசியலின் கூரிய நகங்களைப் பார்வையாளன் மனதில் பதியவைக்கும் விதம் போலித்தனம் அற்ற வாழ்வனுபவம் கொண்டது.

தென் மாவட்டங்களில் உள்ள ஒரு இயல்பான கிராமத்தின் நெடுக்குவெட்டுத் தோற்றம் படத்தில் முழுவதுமாய் பதிவாகியிருக்கிறது. தொழில் முறை நடிகர்களைத் தவிர்த்துக் கிராமத்து இயல்பானவர்களைக் கொண்டு வந்திருக்கிறது இப்படம் .அதுதான் படத்தினுள் நம்மை இயல்பாய் உள்ளிளுக்கிறது. சாதியில் உலர்ந்த நிலம்.உலர்ந்த பொட்டல் வெளிகளும் ,காய்ந்த மரங்களும் அதன் உண்மைத் தன்மையோடு காட்சிகளில் விரிகிறது.ஒரு மிகச்சிறிய ஆனால் யதார்த்தமான கதையை கவிதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள்.
படத்தில் வெளிப்படையாக எந்த அரசியலும் பேசப்படவில்லை.கதை நாயகன் பரியனுக்கு ஏற்படும் இழுக்கைப்போக்க அவன் மேற்கொள்ளும் எதிர்வினை கூட அரசியல் தத்துவங்களால் உருவாக்கப்பட்டதல்ல… அது மிகவும் இயல்பான வாழ்வியல் தத்துவமே.

”நீ என்னை அடித்தால் நானும் உன்னை திருப்பி அடிப்பேன்” என்கிற எளியத் தத்துவம்.ஆனால் காட்சிக்கு காட்சி நமக்குள் ஒரு அரசியலை தீவிரமாக பேசுகிறது. அது தலித்துக்களின் எழுச்சி அரசியல். ”பரியேறும் பெருமாள்” திரைப்படம் மேற்பார்வைக்கு எளிமையானதாகவும் உள்ளுக்குள் பல அடுக்குகளில் கடுமையான அரசியலையும் ஒளித்து வைத்திருக்கும் ஒரு சிறந்த தலித் சினிமாவாகவும் அமைந்திருக்கிறது.

சாதி மனிதனிற்கு ஒரு நூதன அதிகாரத்தை வழங்குகிறது. சக மனிதனை அடக்கி அதிகாரம் செய்யும் உரிமையைப் பிறப்பிலேயே கொடுக்கிறது. இந்த அதிகாரப் போதையிலிருந்து விடுபட அதை உதற உயர் சாதியினர் யாரும் விரும்புவதில்லை, அந்தச் சாதிய நிழலின் கதகதகப்பில் மறைந்து கொள்ளவே விரும்புகிறார்கள்.அது தான் உயர் சாதி வன்மம்.உயர்சாதி கௌரவம்.
இந்த சாதிய வெறி ஒரு தாழ்ந்த சாதிக்காரனுக்கு ஏற்படுத்துகிற வலி நிறைந்த வாழ்வை மலினமான உத்திகளை தவிர்த்து, திரையில் நிகழ்த்தியிருக்கிறது.

அடுத்து புதிய காட்சி அனுபவங்கள்.எடுத்ததுமே கருப்பி என்கிற நாயின் மீதான சாதிய வன்மம்,நம்மை திகைக்க வைத்து விடுகிறது.அதைத் தொடர்ந்து நிகழ்கிற நிகழ்வுகள் அனைத்துமே பார்வையாளனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.அனைத்துமே புதிய காட்சிகள்.இது இப்படித்தான் வரும் என்று யூகிக்க முடியாத திரைக்கதை வடிவமைப்பு.திரையரங்கு மௌனத்தில் உறைந்து கிடக்கிறது.

திருநெல்வேலியை பார்வையாளனுக்கு அறிமுகப்படுத்தும் போது எம்ஜிஆர் சிலை,அண்ணா சிலை,பெரியார் சிலை, காமராஜர் சிலை,இந்திரகாந்தி சிலை மற்றும் கூண்டுக்குள் நிற்கும் அம்பேத்கர் சிலையும்,முத்துராமலிங்க தேவர் சிலையும் காட்டப்படுகிறது.அந்த கூண்டுக்குள் நிற்கிற தலைவர்கள் சார்ந்து வாழ்கிற மக்களின் சாதி சார்ந்த சிக்கல் தான் ”பரியேறும் பெருமாள் படம் என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறார் இயக்குனர்.

peru

இந்து சமுகத்தில், தீண்டாமையின் வேர்கள் இன்னமும் பசுமையாகவே இருப்பதின் காரணமாக ஆதிக்க சாதியினரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் பெருநகரங்களில் சற்று மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் சிறுநகரங்களில் குறிப்பாக கிராமங்களில் தலித் மக்கள் இத்தகைய இருண்ட வாழ்க்கையைதான் காலம் காலமாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
‘நீ தாழ்ந்த சாதியில் பிறந்தவன்”

என்று ஆதிக்கச் சாதியினர் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இதன் மூலம் ஏற்படும் தலித் மக்களின் வலி நீடித்துக் கொண்டேயிருப்பதின் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் செருப்பணியாமல் அதை கையில் தூக்கி நடப்பது, தேநீர்க் கடைகளின் இரட்டைக்குவள வேறுபாடுகள்
இறந்து போனாலும் கூட பிணத்தை வேறு வழிகளில் சுற்றி எடுத்துச் செல்ல வைக்கும் தீண்டாமைச் சுவர்கள் இன்னமும் அழியாமல் உள்ளன.

நாகரிக வளர்ச்சியோ கல்வியறிவின் சதவீத உயர்வோ ஆதிக்கசாதி மனங்களை பெரிதளவில் மாற்றிவிடவில்லை. சாதி அரசியலும் தன்னுடைய ஆதாயங்களுக்காக இந்தத் தீயை அணையாமல் பார்த்துக் கொள்கிறது என்பதை பரியேறும் பெருமாள் அழகாக நிறுவி இருக்கிறது. படத்தின் இறுதிக் கட்சி இந்திய சினிமாவுக்கு புதிய வடிவம். பிரமிப்பூட்டும் துணிச்சலான வடிவம். படம் பார்க்கும் எந்த சாதிக்காரனுக்கும் உறுத்தாத வடிவம். வெறி கொண்ட சாதிய மனநிலையையும் அசைத்துப் பார்க்கிற எளிய வடிவம். அது தான் ”பரியேறும் பெருமாள்” வெற்றிக்கான வடிவம். அப்படியான ஒரு காட்சி. இந்த கட்சி தான் படத்தை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

1.இறுதிக் கட்சியில் கதாநாயகன் கொல்லப்பட்டிருக்கலாம்.
2.தாய் தமக்கைகள் ஊராரால் வன்புணர்வு செய்து பெண்டாளப்பட்டிருக்கலாம்.
3.அப்பாவின் வாயில் அந்த ஊர் தடியர்கள் சேர்ந்து மலக்கரைசலை ஊற்றியிருக்கலாம்.
4.அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காமல் அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் வழக்கமான மேற்சொன்னவை எதுவும் நிகழாத படி ஒரு தலித் வெற்றி சூடுவது போன்றும், ஆதிக்க வெறி மண்ணில் வீழ்வது போன்றும் தமிழ்ச் சினிமாவில் முதன் முதலில் அங்கே காட்டப்பட்டிருப்பது மிகத் துணிச்சலான கட்டுடைத்தல் ஆகும். இந்த ஆலம் விதை நாளை பெரிய மரமாகி வேர்விடும் என்ற நம்பிக்கை நம்முள் துளிர் விடுகிறது.
எதிர் எதிர் துருவங்களின் சந்திப்பும் உரையாடலும் ஒரு பூவைப் போல மலர்கிறது. அதாவது,உயர் சாதிகாரனும், தாழ்ந்த சாதிக்காரனும் எதிர் எதிரே அமர்ந்து பேசுகிற காட்சியும்,வசனங்களின் முதிர்ச்சியும் நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது.

அப்பாவுக்கு பால் டீயும், காதலனுக்கு பால் இல்லாத கருப்பு டீயும் வாங்கி வருகிறள் கதாநாயகி. பேச்சுவார்த்தை முடிந்து, அவர்கள் அருந்தி முடித்த டீ கிளாஸ்கள் இருக்கின்றன. அவற்றின் அடியிலே மீதம் டீ இருக்கிறது.ஒன்னு வெள்ளை. இன்னொன்று கருப்பு. கடைசியாக இந்த இரண்டு டீ கிளாஸ்களும் க்ளோஸ் அப்பில் காட்டப்படும் போது, அரங்கு அதிர கைத்தட்டல். அது தான் கடைசி ஷாட். மயிர்க்கால்கள் சிலிர்க்க நான் எழுந்து நின்றேன். ஆகவே தான், ”பரியேறும் பெருமாள்” தமிழ் சினிமாவின் ”குறிஞ்சி மலர்” என்று துணிச்சலாக சொல்லுவேன்.

இந்த வெற்றி முழுவதும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களையே சாரும். இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கும், இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், படத்தில் நடித்த நடிகர்களுக்கும், தொழிற்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-மு.களஞ்சியம்.
திரைப்பட இயக்குனர்.

(குறிப்பு; இப்படத்தை எல்லா பள்ளி கல்லூரிகளிலும் அரசு செலவிலேயே திரையிட்டு தீண்டாமையையும், அடக்குமுறையையும் வேரறுக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும். தீண்டாமை அறவே ஒழிகையில் தான் நாம் சுதந்திர தினமோ, குடியரசு தினமோ கொண்டாடுவதில் முழு அர்த்தம் இருக்கும்.)

கார்ட்டூன் கேலரி