பாலியல் வழக்கு கைதிக்கு ஆதரவான பெரம்பலூர் அரசு வழக்கறிஞர் சித்ரா பணி நீக்கம்: கலெக்டர் சாந்தா அதிரடி

பெரம்பலூர்:

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு வழக்கறி ஞர் சித்ரா அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட கலெக்டர் சாந்தா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிவபாலு 22 வயது இளைஞர், பெரம்பலூர் மாவட்டம் மணகுப்பம் கிராமத்தை சேர்ந்த16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், சிவபாலு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு பெரம்பலூர் கீழ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக சித்ராதேவி என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி பெற்றுத்தராமல், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக  செயல்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசிய ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வழக்கறிஞர் சித்ராவை பணி நீக்கம் செய்யக்கோரி மாதர் சங்கம் உள்பட அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதுகுறித்து மாவட்ட ஆட்சியிரிடமும் புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  அரசு வழக்கறிஞர் சித்ராவை பணிநீக்கம்  செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.