சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதியான பேரறிவாளன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அமர்வு கடந்த வாரம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பேரறிவாளன் இன்று சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார் பேரறிவாளன்.  இந்த நிலையில், ஏற்கனவே உடல்நல பாதிப்பு காரணமாக, சிறையில் சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், வயதான பெற்றோர்களை காணும் வகையில் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, கடந்த வாரம் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உத்தரவு கிடைத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, 30 நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி,  புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், 30 நாள்கள் பரோலில் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு சென்றார். பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார்.