2 மாதம் பரோல் நிறைவு: மீண்டும் புழல் சிறையில் பேரறிவாளன் அடைப்பு

சென்னை: 2 மாத பரோல் முடிந்துவிட்டதால், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையிலுள்ள பேரறிவாளன் அவரது தந்தையின் உடல்நலக் குறைவு, சகோதரி மகள் திருமணம் ஆகிய காரணங்களுக்காக தமிழக அரசு பரோல் வழங்கியது.

அவரது தாயார் அற்புதம்மாள் அளித்த கோரிக்கை மனுவின் பேரில், அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நவம்பா் 12ம் தேதி புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார்.

பரோல் முடிந்து கடந்த டிசம்பா் 13ம் தேதி பேரறிவாளன் புழல் சிறைக்கு செல்ல வேண்டும். ஆனால், அவரது தாயார் அற்புதம்மாள் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்பேரில் தமிழக அரசு மீண்டும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில் 2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் இன்று சென்னை புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.