ஊரடங்கால் அதிகரிக்கும் ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள்!

புதுடெல்லி: ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இக்காலகட்டத்தில், ஆன்லைன் முறையிலான மருத்துவ ஆலோசனைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 22 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காய்ச்சல், சளி, இருமல் தொண்டைப் புண் மற்றும் உடல் வலி தொடர்பான கேள்விகள் 200% அதிகரித்துள்ளன. மொத்த கேள்விகளில் அதிகமானவை 25 வயது முதல் 40 வயதுக்குட்டவர்களிடம் இருந்துதான் வருகின்றன.

மேலும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் ஆன்லைன் ஆலோசனை வசதியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. 40% அளவிற்கான ஆலோசனை நாடல்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து வருகிறத என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஆன்லைன் ஆலோசனைக்கான கட்டணம் இரு மடங்காக அதிகரித்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஐஎம்ஏ சார்பில், இப்படி கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.