ஐ.ஏ.எஸ் உள்பட 381 அதிகாரிகள் மீது நடவடிக்கை!! மத்திய அரசு அதிரடி

டில்லி:

‘‘செய் அல்லது செத்து மடி’’ என்ற கோட்பாடின் அடிப்படையில் நாட்டில் சிறந்த நிர்வாகத்தை கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மனித வள மேம்பாட்டு அமைச்சக மூத்த அதிகாரிகள் ஒருவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் ஓய்வுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசால் 381 அதிகாரிகள் தண்டிக்கப்பட்டள்ளனர். அவர்களது ஓய்வுகால பயனையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதில் 24 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். சரியான செயல்பாடு இல்லாமை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர் என்று மத்திய அரசு காரணம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மனித வள மேம்பாட்டு பணிகள் குறித்து ஒரு புத்தகத்தை புதிய இந்தியாவுக்கான அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் முன்னிலையில் விளக்கம் அளித்தது.

அந்த புத்தகத்தில், ‘‘அதிகாரத்துவத்தின் பொறுப்புத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில் இரண்டாவது தூணின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை கொண்டு நல்ல நிர்வாகத்தை கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவை தாண்டி வெளிநாடுகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்துவம் மத்தியில் ஒழுக்கம் மற்றும் பொறுப்புத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இது மத்திய அரசின் அதிகாரிகள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது.

நாட்டில் மொத்தம் 11,828 குரூப் ஏ அதிகாரிகள் உள்ளனர். இவர்களில் 2, 953 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் ஆவர். குரூப் பிரிவு அதிகாரிகளின் பணி பதிவேடும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஊழல் புரையோடி போன அதிகாரிகளை வெளியேற்றுவதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்த வகையில் 381 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமரிடம் அளித்த விளக்கத்தின் போது தெரிவிக்கப்பட்டது. இதில் 25 ஏ குரூப் அதிகாரிகள், பி குரூப் அதிகாரிகள் 99 பேர் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 21 அரசு அதிகாரிகள் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.

பணி நீக்கம், கட்டாய ஓய்வு, பென்சன் ரத்து போன்றவை 37 குருப் ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள். 8 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 199 குரூப் ஏ அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தவறு செய்வோர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மற்றவர்களுக்கு சுட்டி காட்டவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 24 IAS officers punished: DoPT tells PM, Perform or perish? 357 babus, ஐ.ஏ.எஸ் உள்பட 381 அதிகாரிகள் மீது நடவடிக்கை!! மத்திய அரசு அதிரடி
-=-