சென்னை:  தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்குதமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, அன்பழகன், காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.சம்பத், உதயகுமார், மாஃபா பாண்டியராஜன், சரோஜா உள்ளிட்டோரும் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பெரியார் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி (ஈ.வெ.ரா) 1879, செப்டம்பர் 17ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். 1973ம் ஆண்டு டிசம்பர் 23ந் தேதி காலமானார்.

இவர் எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தத்திற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர்.

பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை.

தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்டவர் பெரியார்.