சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி

--

டில்லி
முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திடம் ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏர்செல் மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே ரூ. 3500 கோடி ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் குறித்தும் ஐ என் எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு குறித்தும் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. இந்த இரு வழக்குகளிலும் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ப திடம்பரம் தன் மீது சிபிஐ சொல்லியுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார். மேலும் ப சிதம்பரம் மற்றும் அவர் மகன் கர்த்தி ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு செய்திருந்தனர். அந்த மனுவின் மீதான விசாரணை இன்று டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.

அவர் அளித்த மனுவில் சிதம்பரத்திடம் இந்த வழக்கில் விசாரணை நடத்த தேவையான அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளித்துள்ளதாக துஷார் மேத்தா குறிப்பிட்டார். இந்த அனுமதி சிதம்பரம் உள்ளிட்ட 6 பேர்களிடம் விசாரணை நடத்த அளிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை விசாரணை நடத்த இனிமேல் அனுமதி கிடைக்கும் எனவும் அவர் கூறினார். அத்துடன் அனுமதி கிடைக்கும் வரை கால அவகாசத்தையும் அவர் கோரினார்.

அதை ஒட்டி சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி ஆகியோரை கைது செய்ய டிசம்பர் 18 ஆம் தேதி வரை இடைக்கால தடை அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிவரை ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.