20ந்தேதி வரை மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக ஆங்காங்கே நடத்தி வரும்  மக்கள் கிராம சபை கூட்டங்களை வரும் 20ந்தேதி வரை நடத்திக்கொள்ள கட்சியினருக்கு  அனுமதி வழங்கி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி முதல் வருகிற 10-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 500 மக்கள் கிராம மற்றும் வார்டு சபை கூட்டங்கள் நடத்திட வேண்டுமென தி.மு.க. மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் கிராம, வார்டு சபை கூட்டங்கள், சில மாவட்டங்களில் பெருமழை காரணமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்று வருகிற 20-ந்தேதி வரை மக்கள் கிராம, வார்டு சபை கூட்டங்கள் நடத்திட கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.